புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனம்(WHO) அளித்திருக்கும் வழிமுறைகளை இந்தியா இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும், இந்தியாவின் செயல்பாடு விரிவாகவும் வலுவானதாகவும் இருப்பதாக கூறியுள்ளார் WHO அமைப்பின் இந்தியப் பிரதிநிதி.
அவர் கூறியுள்ளதாவது, “இந்த விஷயத்தில் இந்தியாவின் பதில் விரிவானதாகவும் வலுவானதாகவும் இருக்கிறது. தொடக்க முதலே இந்த விஷயத்தை இந்திய அரசாங்கம் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது. நாட்டின் பிரதமரே இதில் நேரடியாக அக்கறை கொண்டுள்ளார்.
கண்காணிப்பை வலுப்படுத்துதல், ஆய்வக ஏற்பாடு மற்றும் கண்டறிந்து தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு மாநிலங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இதைத்தான் ஒட்டுமொத்த அரசு அணுகல் என்போம்.
அதேசமயம், இந்தியாவில் சோதனை(டெஸ்டிங்) வசதிகள் இன்னும் விரிவுப்படுத்தப்பட வேண்டும். பரிசோதனைப் பற்றாக்குறையால் தொற்றுள்ள நிறைய பேர், கண்டறியப்படாமல் விடப்படும் வாய்ப்புகள் உண்டு” என்றுள்ளார் அவர்.
இந்தியாவில் பரிசோதனை சாலைகள் மற்றும் செயல்முறைகள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளன என்பது ஏற்கனவே எழுப்பப்பட்ட குற்றச்சாட்டாக உள்ளது.