பெங்களூரு :
சமூக ஊடகங்களில் கொரோனா குறித்து பகிரப்படும் ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை என்று பெங்களூரை சேர்ந்த பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணரும் நாராயணா ஹெல்த் மருத்துவமனை நிறுவனருமான டாக்டர் தேவி ஷெட்டி விளக்கமளித்துள்ளார்.
“காய்ச்சல் இருந்தால் உடனே சோதனை செய்ய தேவையில்லை” என்று பிரபல டாக்டர் தேவி ஷெட்டி பேசியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஆடியோ அவர் பேசியது இல்லை என்று நாராயணா ஹெல்த் மருத்துவமனை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
அந்த ஆடியோ கிளிப்பில், இந்தியாவில் தற்போது அனைவருக்கும் ஒரு “விசித்திரமான பிரச்சினை” இருக்கிறது என்று கூறும் குரல், மேலும் “கொரோனா வைரஸ் அல்லது சந்தேகத்திற்கு உள்ளான அனைவருமே அதைச் சோதிக்க தேவையில்லை” என்று வலியுறுத்துகிறது.
“இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளனர், ஆனால் தற்பொழுது நம்மிடம் 150,000 க்கும் குறைவாகவே கருவிகள் உள்ளன” என்று குரல் கூறியது.
Please note this audio clip is not of Dr. Devi Shetty, Chairman and Founder, Narayana Health. It has been incorrectly attributed to him.
— Narayana Health (@NarayanaHealth) March 19, 2020
இந்த ஆடியோ தெரிந்தோ தெரியாமலோ டாக்டர் தேவி ஷெட்டிக்கும் பகிரப்பட்டிருக்கிறது, அதில்,
“கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் என்ன என்ன அறிகுறிகள் தென்படும் என்பதை விவரிக்கிறது, முதல் எட்டு நாட்கள் காய்ச்சல், உடல் சோர்வு, தொண்டை அழற்சி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். பின், எட்டாவது நாளில் இருந்து குறையத்தொடங்கும்.
அப்படி குறையாமல் எட்டுநாட்களுக்கும் மேல் நீடித்தால் மட்டுமே பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று கூறுகிறது” அந்த ஆடியோ
ஆடியோவுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தனது ட்வீட் மூலம் கைகழுவி இருக்கிறார் இந்த பிரபல டாக்டர்.