புதுடெல்லி: இந்திய அரசின் சர்ச்சைக்குரிய சமூகப் பதிவேடு தயாரிக்கும் பணியில் பங்களித்த இந்தியாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், இந்தப் பதிவேடு நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில், அரசியல்வாதிகளால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று அன்றே எச்சரித்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்தப் பதிவேடு தயாராகி வந்தபோது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்திற்கான பொருளாதார ஆலோசகராக இருந்தார் அந்த அதிகாரியான மனோரஞ்சன் குமார்.
ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் நெறிமுறையிலிருந்து தடம்மாற தயங்காத அடையாளங்கள் வெளிப்பட்டபோது, இந்தப் பதிவேட்டில் போதுமான தனியுரிமைப் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் மனோரஞ்சன் குமார்.
கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி, நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு அரசின் சலுகைகளை கிடைக்கச்செய்து, அரசு திட்டங்களுடைய தாக்கத்தை மதிப்பிடுவதே இப்பதிவேட்டின் நோக்கம் என்று எழுதினார் குமார்.
ஆனால், இன்று 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பல சிறந்த நோக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்தப் பதிவேடு, 1.2 பில்லியன் இந்தியர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் மாறியுள்ளதாக அவர் அச்சம் தெரிவிக்கிறார்.