மலேசியா :
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சிங்கப்பூருடனான தனது எல்லையை இழுத்துமூடியது மலேசியா, இதுபோல் எல்லையை மூடுவது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.
இதுவரை மலேசியா மற்றும் சிங்கப்பூர் மக்கள் பார்த்திராத சரித்திர நிகழ்வாக இது அமைந்த போதும், இதனால் இருநாடுகளிலும் பல்வேறு விதமான புதிய சிக்கல்கள் உருவாகி இருக்கிறது, இதில் சிங்கப்பூர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நாள் தோரும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் மலேசியா சிங்கப்பூர் இடையிலான எல்லையை கடந்து கல்வி, வேலைவாய்ப்பை தேடி செல்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லையை மூடியதன் மூலம், சிங்கப்பூரில் பணியாளர்கள் இல்லாமல் பல்வேறு உற்பத்தி மற்றும் சேவை துறைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்யும் மலேசியாவை, சேர்ந்தவர்களை சிங்கப்பூரிலேயே தங்கவைக்க தேவையான உதவிகளை நிறுவனங்களுக்கு வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்திருக்கிறது.
மேலும், இதனால் உள்நாட்டில் பணியிழந்த சுமார் 1,08,000 அமைப்பு சார் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக ஒவ்வொருவருக்கும் 300 சிங்கப்பூர் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 15,000 ஈட்டுத்தொகையாக வழங்க முடிவுசெய்திருக்கிறது.
அந்நாட்டு, தேசிய தொழிற்சங்க காங்கிரசில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டும், தொழிற்சங்க நிதியிலிருந்து இந்த பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடும் பொருளாதார சிக்கலில் சிக்கியிருக்கும் சிங்கப்பூரை மலேசியாவின் இந்த முடிவு கொரோனா வைரஸ் எனும் சுனாமியில் மூழ்கடித்து விடுமோ என்று அச்சம் கொள்ளவைக்கிறது.