மும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகரில், ரயில்கள் மற்றும் பேருந்துகள் போன்றவை இப்போதைக்கு வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.
இந்தியாவிலேயே, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, மராட்டிய மாநிலத்தில்தான் அதிகமுள்ளது. மேலும், மும்பை நகரம் என்பது அதிக மக்கள் அடர்த்தியும் நெருக்கடியும் அதிகமுள்ள நகராகும்.
எனவே, அந்நகரில் நடைபெறும் பொது ரயில் போக்குவரத்து மற்றும் பேருந்து போக்குவரத்து ஆகியவை ரத்து செய்யப்படலாம் என்ற ஊகம் நிலவி வந்தது.
ஆனால், இதுகுறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது, “மும்பையில் ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்து சேவைகள் இப்போதைக்கு வழக்கம்போல் இயங்கும். ஆனால், தேவையில்லாத பயணத்தை மக்கள் தவிர்க்கவில்லை என்றால், அரசு கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும்” என்றுள்ளார்.
இந்நிலையில், மும்பையின் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினார். அப்போது, பணியாளர்களை வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு அனுமதிக்க வேண்டுமாய் அவர் கேட்டுக்கொண்டார்.