துபாய்:

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சவூதி அரேபியாவில் வழக்கமாக வெள்ளி கிழமைகளின் நடக்கும் அனைத்து தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அல்-அரேபியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ரத்து முடிவு, முஸ்லீம்களின் புனித தளமாக கருதப்படும் மெக்கா, மெதினா ஆகியவற்றுக்கு நடக்கும் தொழுகைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படாது என்று சவுதி அரேபியா மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். கிட்டத்தட்ட 120 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா பரவாமல் இருக்க, பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. சவூதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்து உள்ளது.
இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உட்பட 12 நாடுகளுக்கு யாரும் பயணிக்க வேண்டாம் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சவூதி அரேபியா சுகாதார அமைச்சகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வைரசால் 11 பேர் வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குணமாகி வீடு திரும்பி இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சூடான், எத்தியோப்பியா, தென் சூடான், எரிட்ரியா, கென்யா, ஜிபூட்டி மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறிய நாடுகளில் இருந்து வருபவர்கள் இங்கே நுழையவும், இங்கிருந்து பயணிக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. மார்ச் 9 ம் தேதி ஓமன், பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், லெபனான், சிரியா, ஈராக், எகிப்து, இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கான விமான சேவையை ஏற்கனவே நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சவூதி அரேபியா அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகளவு மக்கள் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் எளிதாக பரவுவதாக வந்த தகவலை அடுத்து, மசூதிகளில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இதுவரை புதிதாக 38 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இத்துடன் சேர்த்து மொத்தமாக 171 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.