புதுடெல்லி: பொது சிவில் சட்டத்திற்கான வரைவை தயாரிக்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, மார்ச் 23ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நாட்டிலுள்ள அனைத்துவித குடிமக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தை உருவாக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் சார்பில் ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சாதி, மத மற்றும் பாலின வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொதுவான சட்டத்தை இயற்ற வேண்டும். திருமணம், விவாகரத்து, சொத்து போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, மத அடிப்படையிலான சட்டங்களுக்கு பதிலாக, பொதுவான சட்டத்தை இயற்ற வேண்டும். பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், டேனிஷ் இக்பால் என்ற சமூக ஆர்வலர் சார்பில், ‘பொது சிவில் சட்டத்திற்கான வரைவை உருவாக்கி, அதுகுறித்து பொது விவாதம் நடத்துவதற்காக அதன் விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்’ என்பதாக புதிய மனு ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் சேர்த்து விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள், இந்த மனுக்கள் மீதான விசாரணை, மார்ச் 23 முதல் துவங்கும் என்று அறிவித்தனர்.