டில்லி

டில்லியில் நடந்த வன்முறையில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் ஆம் ஆத்மியில் இருந்த கவுன்சிலர் தாகிர் உசைன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் நடைபெற்று வருகிறது.  இதில் டில்லி வட கிழக்குப் பகுதியில் சென்ற மாதம் நடந்த போராட்டத்தில் சட்ட எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் கடும் வன்முறை வெடித்தது.  இதில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்ளிட்ட 53 பேர் பலி ஆனார்கள்.

கலவரத்தின் போது நடந்த வன்முறை சம்பவத்தால் உயிரிழந்த அங்கித் சர்மா உடலில் ஏராளமான காயங்களுடன் கழிவு நீர் ஓடையில் சடலமாகக் கிடந்தார்.   இந்த கொலையில் அப்போது ஆம் ஆத்மி கட்சியில் இருந்த கவுன்சிலர் தாகிர் உசைன் மீது சந்தேகம் உள்ளதாக அங்கித் சர்மாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தாகிர் உசைன் வீடு சோதனை இடப்பட்டது.

சோதனையில் அவர் வீட்டில் கிடைத்த ஏராளமான கற்கள், பாட்டில்கள் போன்ற ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.   இதனால் ஆம் ஆத்மி கட்சி அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது.   நேற்று தாகிர் உசைன் டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.  அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.