டெல்லி: நிர்பயா குற்றவாளிகள், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார், வினய் குமார், பவன் குமார், முகேஷ் சிங் ஆகியோரை மார்ச் 20ம் தேதி, அதிகாலை 5:30 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மார்ச் 5ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

குற்றவாளிகளின் கருணை மனுக்கள், மறுசீராய்வு மனுக்கள் நிலுவையில் இருந்த காரணத்தால், விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை ஏற்கெனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

கருணை மனுக்கள், மறுசீராய்வு மனுக்கள் என அனைத்து வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 4 பேரையும் மார்ச் 20ம் தேதி தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, குற்றவாளிகள் கடைசி வாய்ப்பாக சர்வதேச நீதிமன்றத்தின் கதவை தட்டி இருக்கின்றனர். ஆனால், இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் வரையறைக்குள் வருமா என்பது தெரியவில்லை.