பெர்லின்
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி பல்லாயிரம் உயிரிகளை பலிவாங்கியுள்ள நிலையில், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் மற்றொருபுறம் வேகமாக நடந்து வருகிறது.
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வரும் ஜெர்மனியை சேர்ந்த க்யூர் வேக் எனும் நிறுவனத்தை வளைத்துப்போடும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிசெய்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜெர்மன் செய்தித்தாளான “டை வால்ட்” இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மற்றொருபுறம், பெர்லின் சுகாதார அதிகாரிகள் இந்த நிறுவனத்துடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த இருவாரங்களுக்கு முன் மார்ச் 2 ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்காவின் சுகாதார துறை மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றதாகவும் அந்த கூட்டத்தில் வெள்ளை மாளிகையின் அழைப்பின் பேரில் தானும் பங்கேற்றதாகவும் க்யூர் வேக் தலைமை நிர்வாக அதிகாரி, டேனியல் மெனிசெல்லா தெரிவித்துள்ளார். இந்த தகவலை க்யூர் வேக் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் க்யூர் வேக்-கை சேர்ந்த ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு பெரும் தொகையை வழங்க உறுதியளித்திருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடிக்கும் மருந்தை அமெரிக்க உரிமையுடன் பிரத்யேகமாக வாங்கிக்கொள்ள இருப்பதாகவும், பல்வேறு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஜெர்மன் செய்தி ஊடகம் முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மன் சுகாதார அதிகாரிகள், இந்த நிறுவனதிற்கு தேவையான அனைத்து ஊக்கத்தொகையும் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறது.
உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டிருக்க, இந்த நிறுவனம் தனது ஆய்வு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், ஜூன் அல்லது ஜூலை மாதம் மனிதர்களிடம் சோதனை செய்து பார்த்தபின் சந்தைக்கு வரும் என்று கூறியிருப்பதுமே அமெரிக்க ஜெர்மனி மோதலுக்கு காரணமாக இருக்கிறது.
க்யூர் வேக் நிறுவனத்தில் தலைமையகம் ஜெர்மனியில் உள்ளபோதும், அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலும் இந்நிறுவனம் ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளதும், இந்த நிறுவனத்திற்கு 2015 ம் ஆண்டு எபோலா வைரஸ் குறித்த மருந்து கண்டுபிடிக்க பில் கேட்ஸ் பவுண்டேசன் சார்பாக பல்லாயிரம் கோடி நிதியளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் பல்வேறு நாட்டு மக்களும் கொரோனா பரவாமல் இருக்க தங்கள் கைகளை சுத்தம் செய்யும் அதே வேளையில், க்யூர் வேக் எனும் ஜெர்மனி நிறுவனமோ ஓசையில்லாமல் அமெரிக்கா-விற்கு தனது மருந்துகளை விற்று உலக மக்கள் நலனை கைகழுவ பார்ப்பது வேதனையளிப்பதாக உள்ளது.