சென்னை: ஓடும் பேருந்தில், தனக்கு கோரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக பொய்யாக பீதியைக் கிளப்பிய சென்னை – ஐஐடி ஆராய்ச்சி மாணவியால் தேவையற்ற பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
சென்னையிலிருந்து கோவை சென்ற ஒரு தனியார் பேருந்தில், தனது பிறந்த நாளன்று பயணித்துக் கொண்டிருந்தார் ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர். அவரின் தோழிகள் பேருந்தை காரில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.
திடீரென, தன் அருகிலிருந்து பயணியிடம் தனக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக கூறி அவரை பயமுறுத்தினார். அந்தப் பயணி, உடனடியாக, அரசின் சுகாதாரத் துறை உயரதிகாரி சம்பத்திற்கு தகவல் கொடுத்துவிட்டார்.
பின்னர், பேருந்தின் ஓட்டுநரிடம் சென்ற அந்த மாணவி, அதே விஷயத்தைச் சொல்ல, பேருந்து உடனே நிறுத்தப்பட்டது. பயணிகள் கொரோனா வைரஸ் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டார்கள். இதனிடைய அந்த மாணவில், தன் பின்னால் வந்த தோழிகளின் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
பின்னர், சுகாதாரத் துறை ஊழியர்களால் அந்தப் பேருந்து மருத்துவரீதியாக சுத்தப்படுத்தப்பட்டது. பின்னர், அந்த மாணவியின் அலைபேசி எண் கண்டறியப்பட்டு, அவரை நேரடியாக வரவழைத்த சுகாதாரத் துறை, அவர் விளையாட்டாக அவ்வாறு செய்துள்ளார் என்பதை அறிந்து, கடுமையாக எச்சரித்து அனுப்பியது.
கொரோனா தொடர்பாக, மாநிலத்தில் நடந்துள்ள முதல் விளையாட்டு சம்பவமாகும் இது. இதை, ஒரு ஐஐடி மாணவி செய்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.