ரியாத்: கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு பயணிக்க சவூதி அரேபியா தடை விதித்தது.
சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். கிட்டத்தட்ட 120 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
கொரோனா பரவாமல் இருக்க, பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. சவூதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்து உள்ளது.
ஒரே நாளில் மேலும் 17 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உட்பட 12 நாடுகளுக்கு யாரும் பயணிக்க வேண்டாம் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சவூதி அரேபியா சுகாதார அமைச்சகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வைரசால் 11 பேர் வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குணமாகி வீடு திரும்பி இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சூடான், எத்தியோப்பியா, தென் சூடான், எரிட்ரியா, கென்யா, ஜிபூட்டி மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய நாடுகளில் இருந்து வருபவர்கள் இங்கே நுழையவும், இங்கிருந்து பயணிக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. மார்ச் 9 ம் தேதி ஓமன், பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், லெபனான், சிரியா, ஈராக், எகிப்து, இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கான விமான சேவையை ஏற்கனவே நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.