மும்பை: நல்லவேளையாக எங்களின் கூட்டணியில் ஜோதிராதித்யா சிந்தியா போன்ற நபர்கள் இல்லை என்று மராட்டிய சட்டசபையில் பேசியுள்ளார் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார்.
மராட்டிய சட்டசபையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இதைப் பேசினார் அஜித் பவார்.
பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் சுதீர் முங்கண்டிவார், “நாங்கள் சிவசேனா கட்சியை அலட்சியப்படுத்தி தவறு செய்தோம்” என்று சட்டசபையில் கூறியதையடுத்து, இக்கருத்தை தெரிவித்தார் அஜித்பவார்.
இதனையடுத்துப் பேசிய மராட்டிய துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அஜித்பவார், “தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது. நல்லவேளை, ஜோதிராதித்யா சிந்தியா போன்றோர் நமது மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம்பெறவில்லை.
பாரதீய ஜனதாக் கட்சி, சபையில் இல்லாத அவர்களின் உறுப்பினர்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது” என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சுதீர் முங்கண்டிவார், “பாரதீய ஜனதாக் கட்சி, சிவசேனாவை அலட்சியப்படுத்தி விட்டதாக நான் வேடிக்கையாகத்தான் கூறினேன். ஆனால், இது அஜித்பவாருக்கு பொருந்தியதால் அவர் அதைப் பயன்படுத்திக் கொண்டார் போலும்” என்றார்.