தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்கள் குறித்து விவாதிக்க டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்’’ எனக்கே பிறப்பு சான்றிதழ் கிடையாது. அவ்வளவு ஏன்? என் மனைவிக்கும், என குடும்பத்தில் யாருக்குமே பிறப்பு சான்றிதழ் இல்லை. இங்குள்ள எனது அமைச்சரவை சகாக்கள் யாருக்குமே பிறப்பு சான்றிதழ் கிடையாது.

பிறப்பு சான்றிதழ் இல்லாததால் எங்கள் எல்லோரையும் தடுப்பு காவல் மையங்களுக்கு அனுப்பி வைப்பீர்களா?’’ என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய கெஜ்ரிவால்,’’ இங்கே பிறப்பு சான்றிதழ் வைத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் கையை தூக்குங்க’’ என்று சட்டாம் பிள்ளை கணக்காக ஆர்டர் போட-
9 பேர் மட்டும் கையை தூக்கினார்கள்.

‘’பாருங்கள்.. இங்கே உள்ள எம்.எல்.ஏ.க்களில் 61 பேருக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை. மத்திய அமைச்சர்களில் எத்தனை பேர் சான்றிதழ் வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் சான்றிதழை காட்டுவார்களா?’’ என்று சவால் விடுத்தார் கெஜ்ரிவால்.

பின்னர் டெல்லி சட்டபேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

-லட்சுமி பிரியா