டெல்லி:
கொரோனா தொற்று பரவலை தடுப்பு நடவடிக்கையாக வரும் திங்கள்முதல் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களுடன் வழக்கு தொடர்பான ஒருவர் மட்டுமே நீதிமன்ற விசாரணை அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 64 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் ஒருவர் கனடாவை சேர்ந்தவர் என சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
42,296 பயணிகள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதில் 2,559 பேருக்கு அறிகுறிகள் இருப்பதாக தெரிகிறது; 17 வெளிநாட்டவர்கள் உட்பட 522 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“இத்தாலியின் மில்லன் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் அனுப்பப்படும்; நாளை மதியம் கிளம்பி செல்லும் அந்த விமானம், ஞாயிறன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும்,” என உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் இணை செயலர் ரூபின அலி தெரிவித்துள்ளார்.
கெரோனா நோயின் அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் துவக்க நிலை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்புவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதிவரை விடுமுறை அளிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.