டெல்லி:
தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் ஐபிஎல் போன்ற போட்டிகளுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி உள்ள நாட்டின் 13-ஆவது ஐபிஎல் திருவிழா, இந்த மாதம் 29ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, பல நாடுகளின் விசாவை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த சூழலில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வருவதும் சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
மேலும், நாடு முழுவதும் மக்கள் மொத்தமாக கூடுவதற்கும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கும்படி மத்தியஅரசும், பிசிசிஐக்கு அறிவுரை கூறி உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என்று டெல்லி துணை முதல்வர் அறிவித்து உள்ளார்.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே ஐபிஎல் போட்டிகளுக்கு டெல்லியில் தடை விதிக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மாதம் இறுதிவரை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும், மக்கள் கூடும் மால்கள், சினிமா தியேட்டர்களிலும் மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.