போபால்
மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் அம்மாநில ஆளுநரைச் சந்தித்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அறிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க பாஜக திட்டமிடுவதாகத் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன. சமீபத்தில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் இது குறித்து காங்கிரஸ் எம் எல் ஏக்களுடன் பேரம் நடந்து வருவதாகத் தெரிவித்திருந்தார். ஒவ்வொருவருக்கும் ரூ.25 முதல் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச முதல்வராக விரும்பி அது கிடைக்காத நிலையில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாநிலத் தலைமை பதவியைக் குறி வைத்தார். அதுவும் கிடைகக்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் சந்தித்ததாக வெளி வந்த தகவலை அடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது பாஜகவில் இணைந்துள்ள சிந்தியாவின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேர் பெங்களூருவில் பாஜகவினரால் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் கமல்நாத் இன்று ஆளுநர் லால்ஜி டண்டனை திடீரென சந்தித்தார். அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக அப்போது வதந்திகள் பரவின.
கமல்நாத் தாம் ஆளுநரைச் சந்தித்த போது பெங்களூருவில் பாஜகவினரால் சிறை வைக்கப்பட்டுள்ள 19 சட்டப்பேரவை உறுப்பினர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக அறிவித்தார். மேலும் அவர் வரும் 16 ஆம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொண்டு தமது பலத்தை நிரூபிக்கத் தயார் எனக் கூறி உள்ளார்.