டில்லி

என் பி ஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) க்காக எவ்வித ஆவணமும் தேவை இல்லை என அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பட்டியல், மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு உள்ளது.  டில்லியில் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கடும் வன்முறை ஏற்பட்டது.  இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதை மத்திய அரசு தள்ளிப் போட்டு வந்தது.

நேற்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.  அப்போது அவர், “என் பி ஆர் (மக்கள் தொகை பதிவேடு) குறித்து எவ்வித பயமும் வேண்டாம்.   மக்களில்  யாரும் சந்தேகத்துக்கு உரியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.  இந்த பதிவின்போது எவ்வித ஆவணமும் காட்டத் தேவை இல்லை

ஒரு சில தகவல்களை அளிப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும்.  இந்த பதிவில் தனி நபர் சுதந்திரம் குறித்த உச்சநீதிமன்ற வழிகாட்டல்களை மீறல் இருக்காது   இந்த பதிவுக்கு ஆதார் தரவுகள் பயன்படுத்தப்பட போவதில்லை.   எனவே மக்கள் தேவையின்றி பயப்பட வேண்டாம் “ எனத் தெரிவித்துள்ளார்.