டெல்லி:
கொரோனா மட்டுமின்றி பொருளாதார அழிவையும் இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், அதை மீட்க மோடி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இதன் காரணாக நாட்டின் தொழில்வளங்கள் பாதிக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய யுத்திகளை கையாள வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் மோடி அரசுக்கு புத்திமதி கூறியும், அது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே உள்ளது.
தற்போது பொருளாதாரத்தை சரிவுக்கு போட்டிப்போடும் வகையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த புரிதலும் இல்லை என்றும், கொரோனா வைரஸ் தாக்கும் வரையில் மோடி அரசு உறங்கிக் கொண்டு இருந்துவி்ட்டதாகவும், பிரதமர் மோடியின் கொள்கையால் பொருளாதாரம் நாசமாகிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.
கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து சென்றது. ஆனால், மோடி அரசு பொருளாதார சரிவுவை எதிர்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது… இந்த பொருளாதார சுனாமியால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்,
இந்திய மக்கள் கொரோனா வைரஸுக்கு மட்டுமல்ல, வரவிருக்கும் பொருளாதார அழிவுக்கும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நான் அதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எங்கள் மக்கள் அடுத்த 6 மாதங்களில் கற்பனை செய்ய முடியாத வேதனையை அனுபவிக்கப் போகிறார்கள் என்று வேதனை தெரிவித்து உள்ளார்.