டில்லி

உலக நாடுகள் பலவும் கொரோனா வைரசுக்கு அஞ்சி சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வரத் தடை விதித்தும், விமான சேவைகளை ரத்து செய்தும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் நிலையில், ஈரானில் உள்ள 250க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் நிலை பெரும் கவலையளிப்பதாக உள்ளது. இதற்கென மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து டில்லி உயர்நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

   ஈரானில் உள்ள கல்வி நிறுவனங்களில் காஸ்மீர், கேராளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். வங்கி, போக்குவரத்து உள்ளிட்ட பல அடிப்படை சேவைகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ள நிலையில் அவர்கள் தாயகம் திரும்புவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இந்தியா திரும்ப பதிவு செய்த விமான டிக்கெட்டுகள் மீண்டும் மீண்டும் ஈரான் அரசால் ரத்து செய்யப்படுவதாகவும், தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஈரானில் தவித்துவரும் இந்திய மாணவர்களை மீட்க வேண்டுமென நாடுளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சூழலை அடுத்து டில்லி உயர்நீதிமன்றம், ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியோடு மாணவர்களை விரைந்து மீட்கவேண்டும் எனக் கருத்து கூறியது. மேலும் இது தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் தெரிவிக்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

அதிக அளவில் கொரோனாப் பரவல் ஏற்பட்டுவரும் ஈரானில் அதன்  முதல் துணை அதிபராக இருந்த இஷாக் ஜஹாங்கிரும்  பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.