கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாநிலம் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக திருவனந்தபுரத்தில் அமைச்சர் கே.ராஜுவின் மேற்பார்வையில் கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் கொடியாதூர், வென்கயேரி கிராமங்களில் உள்ள பண்ணைகளில் கோழிகள் 2 நாட்களுக்கு முன் திடீரென இறந்து விழுந்தன. இதையடுத்து அவற்றின் மாதிரிகள் மத்தியப் பிரதேச தலைநகர் போபால் நகரிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
ஆய்வின் முடிவில் கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால், கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள அந்த 2 கிராமங்களிலும் உள்ள கோழிகளை முற்றிலும் அழிக்கும் பணி துவங்கப்படும் என அதிகாரி தெரிவித்தார். இதனையொட்டி கேரளா முழுவதிலும் உஷாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பீதி உலுக்கிவரும் நிலையில், தற்போது பறவைக் காய்ச்சல் பீதி வேறா? என்ற புலம்பல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.