திருவனந்தபுரம்: மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படவுள்ள உலக மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கி, அவர்களை கவுரவிக்கும் வகையிலான திட்டங்களை அறிவித்துள்ளது கேரள அரசு.
இத்திட்டம் தொடர்பாக கேரள காவல்துறை இயக்குநர்(டிஜிபி) லோகநாத் பெஹெரா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, “உலக மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்க வேண்டும்.
இதன்படி அனைத்து காவல் நிலையங்களிலும் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள், தங்கள் காவல்நிலையங்களில் உள்ள பெண் போலீசாரிடம் முக்கிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதல்வரின் வாகனப் பாதுகாப்பிலும் பெண் கமாண்டோக்கள் பணியில் அமர்த்தப்படுவர்” என்றுள்ளார்.
இதுதவிர, மகளிர் தினத்தன்று பெண்களை கொண்டாடும் வகையில், ரயில்களை பெண்கள் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “மகளிர் தினத்தன்று காலை 10.15 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பும் வெனாட் எக்ஸ்பிரஸ் பெண்களால் இயக்கப்படும். லோகோ பைலட், உதவி லோகோ பைலட், பாயிண்ட்ஸ்மேன், கேட் கீப்பர் மற்றும் டிராக் வுமன் அனைவரும் பெண்களாக இருப்பார்கள்.
டிக்கெட் முன்பதிவு அலுவலகம், தகவல் மையம், சிக்னல், வண்டி மற்றும் வேகன் இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகளே நியமிக்கப்பட்டிருப்பார்கள்.
மேலும் மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறாத (தனியார் பள்ளிகளின்) ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகைகளை அனுமதிக்கும் வகையிலான அறிவிப்புகளையும் கேரள அரசு அறிவித்துள்ளது.