கோவை
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கமலஹாசனை கலாய்த்துள்ளார்.
செய்தித்தாள்களில் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் கொரோனா, மாணவர்கள் மோதல், விபத்துகள், பலாத்காரம் எனப் படித்துப் படித்து மன அழுத்தம் ஏற்படும் வாசகர்களை, அவ்வப்போது ’ரிலாக்ஸ்’ அடைய வைக்கும் அரசியல்வாதிகளில் பா.ஜ.கவின் சுப்ரமணியசாமியும் ஒருவர்.
கோவையில் நேற்று பேட்டி அளித்த அவர், வழக்கம்போல் தமாசு செய்யத் தவறவில்லை.
எடுத்ததுமே ‘டாப் கியரில்’ ஆரம்பித்தார்.
‘’சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள(ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி) சசிகலா விடுதலையானதும் தமிழ்நாட்டு அரசியலில் நிறைய மாற்றங்கள் நிகழப்போகின்றன.அத்தனை சுலபமாகத் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து சசிகலாவை ஒதுக்கிவைத்து விடமுடியாது.
சசிகலா அனுபவம் மிக்கவர்…திறமையானவர்..ஒரு சமூகமே அவர் பின்னால் அணி வகுத்து நிற்கிறது.எனினும் விடுதலையான பின் அவரால் 6 வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது’’ என்று கூறிவிட்டு, ரஜினி, கமல் ‘சப்ஜெக்ட்டு’ க்கு தாவினார்.
’’கமல்ஹாசனின் அரசியல் பற்றிச் சொல்லுங்கள்?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது’’ கமல்ஹாசனா? யார் அவர்?’’ என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவர், ரஜினி புராணம் பாட ஆரம்பித்தார்.
‘’ரஜினிகாந்த். தனது இந்துத்வா கொள்கையில் உறுதியாக இருந்தால், எனது ஆதரவு அவருக்கு உண்டு. துக்ளக் பொன்விழாவில் ரஜினிகாந்த் பேசியது போல் தொடர்ந்து அவர் பேச்சு இருந்தால், அவருக்கு நான் உதவியாக இருப்பேன்’’ என்று பிரகடனம் செய்தார், சுப்ரமணியசாமி.
தனது கட்சியான பா.ஜ.க.பற்றியும் கொஞ்சம் பேசினார்.
‘’ தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, சட்டசபைத் தேர்தலில் சொந்தக் காலில் நின்று வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் வலிமையில் உள்ளது.ஆனால் அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க இதுவரை அவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை’’ என்று ,உள்ளூர் பா.ஜ.க. தலைமைக்குக் குட்டு வைத்து, ‘காமெடி நேரம் ‘ நிகழ்ச்சியை எந்த பிசிறும் இல்லாமல் நிறைவு செய்தார், சுப்ரமணியசாமி.
– ஏழுமலை வெங்கடேசன்