டில்லி
கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பானை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்றால் கடும் தண்டனை என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 3200க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 90000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இது வரை 31 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்திய மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள மக்களில் பலரும் முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பானை பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். ஆனால் நாட்டின் பல இடங்களில் இந்த முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இவை பதுக்கி வைக்கப்பட்டு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மத்திய ரசாயனம் மற்றும் மருந்துத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, “இந்தியாவில் தேவையான அளவுக்கு கை சுத்திகரிப்பான் மற்றும் முகக் கவசம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக்கு தட்டுப்பாடு உள்ளதாகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே எங்கள் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
யாராவது கை சுத்திகரிப்பான் மற்றும் முகக் கவசத்தைப் பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான மருந்துகள் கைவசம் உள்ளது.”எனத் தெரிவித்துள்ளார்.