டில்லி
யெஸ் வங்கி ஏ டி எம் களில் காசோலைகளைப் போட வேண்டாம் என அதானி கேஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.
யெஸ் வங்கி தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கியில் போடப்படும் மற்றும் இந்த வங்கியின் காசோலைகள் பணமாக்கப்பட மாட்டாது என நேற்று முன் தினம் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ரிசர்வ் வங்கி ஒரு முதலீட்டாளர் அதிக பட்சமாக ரூ.50000 வரை மட்டுமே கணக்கில் இருந்து எடுக்க முடியும் எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் யெஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள பல பெரிய நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.
அதானி கேஸ் நிறுவனம் இந்தியாவின் பல நகரங்களில் எரிவாயு விநியோகம் செய்து வருகிறது. அதற்கான பில் தொகைகளுக்கான காசோலைகளை யெஸ் வங்கியின் ஏடிஎம் மூலம் வாடிக்கையாளர்கள் செலுத்துவது வழக்கமாகும். கடந்த 25 ஆம் தேதி இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு அதானி கேஸ் நிறுவனம் ஒரு தகவல் அனுப்பி உள்ளது.
அதில் வாடிக்கையாளர்கள் தங்கள் எரிவாயு பில் தொகைகளுக்கான காசோலைகளை யெஸ் வங்கியின் ஏ டி எம் மூலம் செலுத்த வேண்டாம் எனக் கேட்டு கொண்டுள்ளது. மேலும் யெஸ் வங்கியில் இருந்து அதானி நிறுவனம் இந்த சேவை பெறுவதை நிறுத்திக் கொண்டதால் ஆக்சிஸ், ஐடிபிஐ, ஐசிஐசிஐ, காலுபூர் மற்றும் எச்டிஎஃப்சி ஏடிஎம் களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அதானி நிறுவனம் இவ்வாறு முன் கூட்டியே அறிவிப்பு அளித்ததால் வங்கி நிலவரம் குறித்து இந்நிறுவனம் ஏற்கனவே தெரிந்துக் கொண்டுள்ளதா என்னும் சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.