துபாய்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சுமார் 30 கோடி குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் கடந்த பல நாட்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர் என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில், உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த வைரஸ் பரவத் தொடங்கிவிட்டது.
பல முஸ்லீம் நாடுகளில் வெள்ளிக்கிழமை தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, முஸ்லீம்களின் புனித ஸ்தலங்களுள் முதன்மையானதான மெக்கா மசூதியே மூடப்பட்டுவிட்டது.
இந்நிலையில், யுனெஸ்கோ சார்பாக, கொரோனா அச்சத்தால், உலகளவில் பள்ளிகள் மூடல்கள் குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “மொத்தம் 13 நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன. இதனால், சுமார் 290.5 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 9 நாடுகள் ஆங்காங்கே பள்ளிகளை மூடியுள்ளன.
நெருக்கடிகளின்போது தற்காலிக முறையில் பள்ளிகளை மூடுவது புதியவை அல்ல என்றாலும், தற்போதைய கல்வி சீர்குலைவு என்பது உலக அளவில் அதிகமாக உள்ளது.
மேலும், இதுவரை இல்லாத ஒன்றாகும் இது. இத்தகையச் சூழல் நீடித்தால் கல்வி உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்” என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.