டெல்லி:

நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது  உச்சநீதி மன்றத்தில் பெண் நீதிபதி பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதை  நிறைவேற்றுவதில் குற்றவாளிகள் தரப்பில் அவ்வப்போது தாக்கல் செய்யப்படும் மனுக்கள் காரணமாக  தாமதம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான  வினய் சர்மா என்பவர்,  சிறையில் தான் அனுபவித்த சித்திரவதை காரணமாக ஏற்பட்ட ”மன உளைச்சலை” குடியரசுத்தலைவர் கருத்தில் கொள்ளாமல் தனது கருணை மனுவை நிராகரித்து உள்ளதாக கூறி,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் பானுமதி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  குற்றவாளி நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் உள்ளார். இதனால், மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு கூறியபோது, நீதிபதி பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அருகில் இருந்த பெண் உதவியாளர், அவரை கைத்தாங்களாக பிடித்துக்கொண்டார். உடனே அவரை அறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் உச்சநீதி மன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, அவருக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் சுயநினைவை இழந்துள்ளார் என்றும், தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.