நெட்டிசன்:
Ramaprabha Rajagopalan முகநூல் பதிவு
தஞ்சை பெரிய கோவில் கலசத்திற்கு தங்க முலாம் கைங்கர்யத்தை ஏற்ற
கோவையின் ஸ்ரீ குமார் அவர்களை பற்றி திரு. மாரி ராஜன் அவர்கள் எழுதிய அருமையான பதிவு.
#குடுத்தார்கள்…….
பெரியகோவிலில் உள்ள அந்த பிரபலக் கல்வெட்டின் பிரசித்திப் பெற்ற வரிகள் இவை..
” குடுப்பார் குடுத்தனவும் ஸ்ரீவிமானக் கல்லிலே வெட்டியருளுக ”
நடந்து முடிந்த குடமுழுக்கு விழாவில் இந்த குடுத்தார்கள் குடுத்தவை மிக அதிகம்.
ஏராளமானோர் கோவிலின் அநேகப்பணிகளை தங்கள் பொறுப்பாகக் கொண்டு செய்தார்கள்.
குடமுழுக்குப் பற்றியத் தகவல் உறுதியானவுடன் இந்த குடுத்தார்கள் கோவிலில் குவிந்தார்கள்.
பலத்த போட்டிகளுக்கிடையே பல பணிகளை தங்கள் பொறுப்பில் ஏற்றார்கள்.
புதியதாக நிறுவப்பட்ட கொடிமரத்திற்கான 40 அடி உயர தேக்குமரத்தை ஒரு அன்பர் நன்கொடையாக வழங்கினார்.
கொடிமரத்தின் மீது போர்த்தும் செப்புத் தகடுகளை பாலிஷ் செய்து ஒரு அன்பர் வழங்கினார் ரூ 10 லட்சம் மதிப்பில்.
பல லட்சம் ரூபாய் செலவில் சாரம் அமைப்பதற்கான செலவுகளை பலர் பகிர்ந்து ஏற்றார்கள்.
தொல்லியல்த்துறையும் ஒரு பங்கை ஏற்றது.
குடமுழுக்குப் பணிகள் நடைபெற்றபோதும், குடமுழுக்கு நாளன்றும், கோவில் பணியாளர்கள் , காவலர்கள் மற்றும் அனைவருக்கும் உணவு வழங்கும் பொறுப்பை ஒருவர் ஏற்றார்.
5 நாட்கள் 5 திருமண மண்டபங்கள் .
நாள் முழுவதும் உணவு தயாரிக்கும் வேலை நடந்து கொண்டே இருந்தது.
10 டன் பூக்களை ஆதின மடம் வழங்கியது.
யாகசாலை பொறுப்புகளை பல மடங்கள் இணைந்து பங்கேற்றது.
பூஜை சாமான்கள், பாத்திரங்கள், இன்னும் ஏராளமான செலவுகளை பல அன்பர்கள் அகமகிழ்வோடு ஏற்றார்கள்.
இந்த அநேக குடுத்தார்களில் ஒருவரிடம் நெருங்கி பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
இவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது என் அருமை நண்பர் திரு.ரங்கநாதன் ஞானசேகரன்..
கோவையைச் சேர்ந்த ஒரு சிறு தொழில் அதிபர் இவர். பெயர் ஸ்ரீகுமார்.
இராஜராஜன் மீதும் பெரியகோவில் மீதும் அளவு கடந்த அன்பு மற்றும் அபிமானம் கொண்டவர்.
ஸ்ரீவிமான உச்சியில் இருக்கும் 12 அடி உயர கலசத்திற்கு தங்கமுலாம் பூசப்படவேண்டும்.
இதற்கான தங்கத்தை நன்கொடையாக வழங்கும் வாய்ப்பு ஸ்ரீகுமாருக்குக் கிட்டியது..
ஏறக்குறைய 36 லட்சரூபாய் மதிப்பில் தங்கம் வேண்டும். இச்செலவை இவர் ஏற்றார்..
தனது வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கிடைத்த தொகையின் மூலம் இந்த தங்கத்தை வாங்குகிறார்.
எனக்கோ திக்கென்றிருந்தது..
என்ன சார் இப்படி..? வீட்டை அடமானம் வைத்து….
No problem sir..
இரண்டு வருடத்தில் வீட்டை மீட்டுவிடுவேன்.
இவ்வாய்ப்பு எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமல்லவா .. என்றார்..
ஒரு நாள் அவரிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு. .
குடமுழுக்கு அன்று 50 ,000 பேருக்கு அன்னதானம் வழங்கவேண்டும் என்றார்..
என்னாது..? 50, 000 பேருக்கு அன்னதானமா.?
நான், சசி, குமரவேல், பார்த்தி, நான்குபேரும் கோவிலுக்குச் சென்று அவரை சந்தித்து .. குடமுழுக்கு நாளன்று 50, 000 பேருக்கு உணவு வழங்குவது அசாத்தியமான செயல்.
குடமுழுக்கு முடிந்தபிறகு 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கும். இந்நாட்களில் ஒரு 5 நாட்களை தேர்ந்தெடுத்து தினமும் 10, 000 பேருக்கு உணவு வழங்குவோம் என்று ஆலோசனை கூறி வந்தோம்..
நாங்கள் தந்த ஆலோசனைப்படியே இன்று அன்னதானம் நடைபெற்றது.
மீண்டும் ஒரு நாள் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு..
சொல்லுங்க சார்..
குடமுழுக்கு அன்று இராஜராஜனுக்கும் அவரது தேவிக்கும் புத்தாடை எடுக்க வேண்டும் என்றார்.
எந்த சிற்பத்துக்கு சார்.?
என்ன சார் நீங்க..?
குஜராத்திலிருந்து மீட்டு வந்தார்களே, நம் அரசனை.. அவருக்குத்தான்..
ஓ…. அருமை. எடுங்கள் சார் என்றேன்..
என்ன கலரில் எடுப்பது..?
சிவபாதசேகரனாயிற்றே அவர்.
சிவனுக்குப் பிடித்த மெருன் கலர். பரிவட்டம் வெள்ளை. தேவிக்கு கிளிப்பச்சை என்று பரிந்துரை செய்தேன்.
துணிக்கடையிலிருந்து புகைப்படம் எடுத்து அனுப்பினார். அதில் ஒன்றை நான் தேர்வு செய்தேன்…
சார்.. நீங்கள் தேர்வு செய்தது விலை குறைச்சலாக உள்ளது.
அதன் பிறகு, விலை உயர்ந்த ஆடைகளை தேர்வு செய்து, வாங்கப்பட்டது..
குடமுழுக்கு நாள் அன்று இவர் தேர்வு செய்த ஆடைகளை அணிந்து இராஜராஜனும் அவர் தேவியரும் வீதியுலா வர..
அக்காட்சியைக் கண்டு கண்ணீர் மல்க உறைந்து நின்றார்.
குடமுழுக்கிற்காக தனக்குக் கிடைத்த V.v.i.p.பாஸ்களை தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்குக் குடுத்துவிட்டு..
மக்களோடு மக்களாக பொது வழியில் சென்று குடமுழுக்கு நிகழ்வை பார்த்தார்..
குடமுழுக்கு நாள் அன்று கும்பத்திற்கு நீர் தெளிக்கும் நிகழ்வு நிறைவுபெற்றபிறகு பெருவுடையாரை தரிசிக்க நானும் அவரும் வரிசையில் நின்றோம்.
தரிசனம் முடிந்து அர்ச்சகர் விபூதி வழங்குகிறார்.
விபூதி தட்டில் 500 ரூபாய் கட்டு ஒன்றை, 50, 000 ரூபாயை தட்சணையாக வைத்தார்.
எனக்கு வியப்பு.. அர்ச்சகருக்கு திகைப்பு.
சார்.. உங்களது அரும்பெரும் செயல்களை எனது முகநூல் பதிவாக போடுகிறேன் என்றேன்..
ஆத்தீ.. வேண்டாம் சார் என்றார். இவைகள் எனது மன்னனுக்காக, நம் கோவிலுக்காக செய்தது என்கிறார்.
ஹிந்து.. ஆங்கில பத்திரிகையில் வந்ததே. வீட்டை அடமானம் வைத்து தங்கம் வாங்கி கலசத்திற்கு முலாம் பூச நீங்கள் கொடுத்த செய்தி வந்ததே சார்..
அச்செய்தி. . எப்படி வந்ததே என்று எனக்கே தெரியவில்லை சார்..
இருக்கட்டு ..உங்களோடு பயணித்த நாட்களின் அனுபவத்தை பதிவாகப் போடுவது எனக்கு ஓர் திருப்தி என்றேன்..
இதோ .. பதிவிட்டாயிற்று..
இராஜராஜன் …
இந்த ஒற்றைச்சொல்..
எத்தனையோ பேர்களை தன் கட்டுக்குள் வைத்துள்ளது என்பதை நேரடியாக உணர்ந்தேன்.
சூரியசந்திரர் இருக்கும் வரை இப்பெருங்கோவிலும் இருக்கும் என்ற இராஜராஜனின் கூற்று காலத்தை வெல்லும் நிதர்சனம்..
இராஜராஜனும்.. பெரியகோவிலும்.. பெருவுடையாரும்….
நிறைவு…
அன்புடன்.
மா.மாரிராஜன்.
Thanks for the information Shobana Kumar