திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் குடிநீர் பாட்டில்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர முடிவெடுத்துள்ள அம்மாநில அரசு, அதன்படி 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை அதிகபட்சம் ரூ.13 என்ற அளவை மீறக்கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரூ.13க்கு அதிகமாக தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, தனியார் தண்ணீர் பாட்டில்களின் விலை இடத்திற்கு ஏற்றாற்போல் நோக்கம்போல விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்தான் அந்த விஷயத்தில் விலைக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் முக்கிய நடவடிக்கையை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு அம்மாநிலத்தில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.

கேரள உணவுத்துறை அமைச்சர் திலோத்தமன், “1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை ரூ.12க்கு விற்பனை செய்ய அரசு முதலில் முடிவு செய்தது. ஆனால், வர்த்தகர்கள் எதிர்ப்பால் ரூ.13 என்பதாக இறுதி செய்யப்பட்டது. அனைத்துக் குடிநீர் பாட்டில்களுக்கும் பி.ஐ.எஸ் தரச்சான்று அத்தியாவசியம் என அரசு முடிவெடுத்துள்ளது.

இதன்மூலம் அங்கீகாரம் பெறாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை முற்றிலும் தடைசெய்யப்படும். புதிய விலை விரைவில் அமலுக்கு வரும்” என்றுள்ளார்.