டெல்லி:

லைநகர் டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் அங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 70 எம்எல்ஏக்களில் 43பேர் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், 7பேர் மீது பாலியல் வன்கொடுமை புகார்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

70 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களை  ஆம் ஆத்மியும்,  8 இடங்களில் பாஜகவும்  வெற்றி பெற்றுள்ளது. ஆம்ஆத்மி கட்சி வரும்16ந்தேதி பதவி ஏற்க உள்ளது.

இந்த நிலையில், வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து, , ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில்,  தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்களில் 43 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர்களில் 37 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றம்,  பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி போன்ற தீவிர குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்து உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் வெற்றி பெற்ற 24 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், தற்போது வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்களில் 65 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றவழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

அதுபோல வெற்றிபெற்ற எம்எல்ஏக்களில் 45 ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள், 7 பாஜக எம்எல்ஏக்கள்  ரூ.1 கோடி அளவுக்கும் மேலான சொத்துக்கள் உளளதாகவும் தெரிவித்து உள்ளது.