லக்னோ:
லக்னோ நீதிமன்றத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். மேலும் 3 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி. மாநிலம், லக்னோ பகுதியில் உள்ள வஷிர்கஞ்ச் மாவட்ட சிவில் நிதிமன்றத்தில் இன்று காலை திடீரென குண்டு வெடித்தது. இதில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த குண்டு வெடிப்பு நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். இதில் மேலும் 3 குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், அலுவலர்கள் என அனைவரையும் வெளியேற்றிய காவல்துறையினர், அந்த 3 குண்டுகளையும் எடுத்துச் சென்றனர்.
இந்த குண்டுவெடிப்பு காரணமாக லக்னோவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த குண்டு வெடிப்புக்கு காரணம், நீதிமன்றத்தில் உள்ள இரண்டு குழு வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக அந்த பகுதியைச்சேர்ந்த உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
வழக்கு ஒன்றிற்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞரை தாக்கும் முயற்சியாக இந்த வெடிகுண்டு நிகழ்வு நடைபெற்றதாகவும், இது தொடர்பாக குண்டு வைத்து, ஜித்து யாதவ் என்பரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.