புதுச்சேரி:
‘மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக இருக்க தகுதியற்றவர் கிரண்பேடி என பேரவையில் முதல்வர் நாராயணசாமி காட்டமாக தெரிவித்து உள்ளார்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என போர்க்கொடி தூக்கி, அதற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன.
ஏற்கனவே கேரளா, மேற்குவங்கம் உள்பட காங்கிரஸ் கட்சி ஆளும் பல மாநிலங்களில் சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில், இன்று புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அதன்படி, இன்றைய சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை மாநில முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பைத் தெவித்து பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்தனர்.
இந்த சிறப்புக் கூட்டத்தொடரின் போது அவையில் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகிக்க கிரண்பேடிக்கு தகுதியில்லை, முதல்வருக்கு அனுப்புவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் கடிதங்களை வெளியிடுகிறார் என கடுமையாக சாடினார்
தொடர்ந்து பேசியவர், ஆளுநர் கிரண்பேடி அனுப்பிய கடிதத்தை இப்போது தான் பேரவையில் வாசிக்கிறேன். இதில் முதல்வருக்கு ரகசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வருக்கு அனுப்பிய ரகசிய கடிதத்தை ஆளுநர் கிரண் பேடி பிப்.10 ஆம் தேதியே ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் விதிகளை மீறி கட்செவி அஞ்சல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இதுபோல் அரசின் ரகசிய கடிதத்தை பொது வெளியில் வெளியிட்ட ஆளுநர் கிரண்பேடி தனது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.