டெல்லி:

70 தொகுதிகளை டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத நிலையில்   63 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது.  இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை  ஷீலா தீட்சித் தலைமையில் ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி  தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 66 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், காந்தி நகரைச் சேர்ந்த அரவிந்தர் சிங் லவ்லி, பத்லியைச் சேர்ந்த தேவேந்தர் யாதவ், கஸ்தூர்பா நகரைச் சேர்ந்த அபிஷேக் தத் ஆகிய மூன்று வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட்டை தக்க வைத்துள்ளார்கள். மற்ற 63 இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ள அவலம் நடந்தேறியுள்ளது.

70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும் பாஜக வெறும் 8 இடங்களையும் கைப்பற்றி உள்ள நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாதது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் எழுச்சியால் 2013ல் முதல்முறையாக ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் அதன்பிறகு அங்கு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2015ம் ஆண்டைய தேர்தலிலும் ஒரு  இடங்களைக்கூட கைப்பற்றாத நிலையில், தற்போது 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும்கூட ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை…

கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த பிறகாவது பாடம் கற்றுக்கொண்டு, தங்களது பகுதிகளில் மக்கள் நலப் பணிகளை செய்திருந்தால், இந்த தேர்தலில் சில இடங்களையாவது கைப்பற்றியிருக்க முடியும்… ஆனால்,  செய்யாத மறந்துவிட்ட காங்கிரஸ் கட்சி இன்று டெபாசிட்டை இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஆம்ஆத்மி வெற்றிக்காக டெல்லி மக்களுக்கு சல்யூட் அடித்து  வாழ்த்து தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம் உள்பட எவரும்  தனக்கு ஒத்துழைக்கவில்லை  என ராகுல்காந்தி நேரடியாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.