டெல்லி: கட்சி மேலிடம் விரைவாக முடிவு எடுக்காதது, சில முக்கிய நிர்வாகிகளின் சரியில்லாத செயல்பாடுகளே டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தோற்க காரணம் என அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரசின் இந்த செயல்பாடு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தோல்வி பற்றி அக்கட்சியின் மூத்த தலைவர்களே தலைமை மீது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி காங். தலைவர் சுபாஷ் சோப்ரா கூறியதாவது: டெல்லியில் காங்கிரசின் செயல்பாட்டிற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். மோசமான தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராயப்படும். ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சிகள் பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டதால், காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் குறைந்துவிட்டது என்றார்.
மகளிர் காங்கிரஸ் தலைவி கூறுகையில், காங்கிரஸ் மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்சி மேலிடம் முடிவு எடுப்பதில் தாமதம், சரியாக திட்டமிடாதது, மாநில அளவில் ஒற்றுமை இல்லாதது, உற்சாகமில்லாத தொண்டர்கள், அடிமட்ட தொண்டர்களுடன் மேலிடத்துடன் தொடர்பு இல்லாதவை காரணமாக தோல்வியை சந்தித்தோம். எனது பொறுப்பையும் ஏற்று கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான சந்தீப் தீட்சித் கூறியதாவது: காங்கிரஸ் மோசமாக தான் செயல்படும் என எதிர்பார்த்தேன். இது கடந்த செப்டம்பர் மாதம் முதலே தெரியும்.
டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கவனம் செலுத்தவில்லை. மாநில தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களில் சிலர் தான் கட்சியின் மோசமான தோல்விக்கு காரணம் என்றார்.
ம.பி முதல்வர் கமல்நாத் கூறியதாவது: எங்களுக்கு கிடைக்கும் முடிவு குறித்து முன்னரே தெரியும். பெரிய வாக்குறுதி அளித்த பாஜகவுக்கு என்ன ஆனது என்பதே தற்போதைய கேள்வி என்றார்.
லோக்சபா காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜக அல்லது ஆம் ஆத்மியை தான் தேர்வு செய்வோம் என்பதில் மக்கள் கவனமாக உள்ளனர். வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் ஓட்டளித்தனர்.
இந்த தேர்தலில் வெற்றி பெற, ஒட்டுமொத்த மத்திய அரசு இயந்திரமும் களமிறங்கியது. பிரதமர் முதல்வர் அடிமட்ட பாஜக தொண்டர்கள் வரை களத்ததில் இறக்கப்பட்டனர். காங்கிரஸ் தோல்வி என்பது நல்ல செய்தி அல்ல என தெரிவித்தார்.
ராஜ்யசபா எம்பி அபிஷேக் சிங்வி, டெல்லி தேர்தலில், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சிறந்த பணிக்காக ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஷீலாவிற்கு மாற்று நபரை காங்கிரஸ் கண்டுபிடித்து, 3 அல்லது 4 ஆண்டுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.