டெல்லி: 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்கும் படி தமிழக அமைச்சரவை 2018ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த பரிந்துரை மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதி மன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்துள்ளார். பேரறிவாளன் பிரச்சனை தொடர்பாக சிபிஐ தரப்பில் புதிய நிலவர அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

சிபிஐ அறிக்கை அளிக்காததால் பேரறிவாளன் பிரச்சனையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தெரிவிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு  அனுப்பப்பட்டது என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆளுநர் முன் எத்தனை மாதங்களாக நிலுவையில் உள்ளன என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பின்னர் ஆளுநருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது. தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்கள் அல்ல என்று கூறியது. பிறகு வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு  தள்ளி வைக்கப்பட்டுள்ளது.