பதோகி, உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரவீந்திரநாத் திரிபாதி மற்றும் ஆறு பேர் மீது ஒரு பெண் பலாத்கார புகார் அளித்துள்ளார்.
பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடைபெறுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. உன்னாவ் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒரு மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பத்ரோகி பகுதியில் ஒரு பெண் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரவீந்திரநாத் திரிபாதி மீது ஒரு புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை அதிகாரி ராம் பதான் சிங், “புகார் கொடுத்த பெண்ணின் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மரணம் அடைந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரவீந்திரநாத் திரிபாதியின் உறவினரைச் சந்தித்து அவர் உதவி கேட்டுள்ளார்.
அப்போது ரவிந்திரநாத் தன்னை திருமண ஆசை காட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தம்மை ஒரு விடுதி அறையில் அடைத்து வைத்து ரவீந்திரநாத் மற்றும் அவர் குடும்பத்தினர் ஆறு பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ” எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கு தற்போது காவல்துறை துணை சூப்பிரண்டிடம் விசாரணைக்காக அளிக்கப்பட்டுள்ளது.