சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  தனியார் நிறுவனம் சார்பில் சர்வதேச தரத்திலான  கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து கிரிக்கெட் ஆடினார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்து உள்ள  காட்டுவேப்பிலைப்பட்டி. இங்கு  சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மைதானத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவில், சிஎஸ்கே தலைவர் இந்தியா சிமென்ட் சீனிவாசன், கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் உள்டபட அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இந்த கிரிக்கெட்  மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அதையடுத்து  மைதானத்தைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி, அங்குள்ள பிட்ச்சில் கிரிக்கெட் ஆடினார். அவருக்கு பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பந்து வீசினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,  சென்னையில் மட்டுமே ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேலம் மாவட்ட மைதானத்திலும்  ஐ.பி.எல். போட்டிகள் நடத்த வேண்டும் என்றும்,  மைதானத்தை மேம்படுத்த அரசுத் தரப்பில் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார்.