புதுடெல்லி: டெல்லி மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமாக 62.59% வாக்குகள் பதிவாகியுள்ளதாக 24 மணிநேர தாமதத்திற்குப் பிறகு அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
டெல்லி சட்டசபையில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 11ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
ஆனால், தேர்தல் நாளன்று மாலை 5 மணிக்கு 61.54% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதோடு சரி; மொத்தத்தில் பதிவான வாக்குகளின் விபரங்களை அறிவிக்கவில்லை.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தேர்தல் கமிஷனின் இந்த செயலைக் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், தேர்தல் முடிந்து 3 மணிநேரங்களில் அறிவிக்கக்கூடிய ஒரு விஷயத்தை, மிகவும் தாமதமாக 24 மணிநேரங்கள் குறித்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இன்று(பிப்ரவரி 9) மாலை செய்தியாளர்களை சந்தித்த டெல்லி தேர்தல் ஆணையர், மொத்தமாக 62.59% வாக்குகள் பதிவானதாக அறிவித்துள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலைவிட இது 2% அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
அதேசமயம், கடந்த 2015 டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 67.47% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.