வாஷிங்டன்: இந்த 2020ம் ஆண்டின் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) தேர்தலில், இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் பெயர் மங்கா அனந்த்முலா. வெர்ஜீனியா மாகாணத்தில் அவர் போட்டியிடவுள்ளார். நவம்பர் மாதம் 3ம் தேதி காங்கிரஸ் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சியின் சார்பாக களமிறங்குகிறார் மங்கா.
ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் பள்ளிப் படிப்பையும், உத்திரப்பிரதேசத்தில் பட்டப்படிப்பையும் முடித்து, அமெரிக்காவில் குடியேறினார்.
அமெரிக்க அரசின் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் திட்டத்தில் அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றினார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து மங்கா கூறியுள்ளதாவது, “அமெரிக்க நாடாளுமன்றத்தில் என் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்காக மற்றும் இந்துகளின் நலன்களுக்காக குரல் கொடுப்பேன். வெர்ஜீனியா, எப்போதும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளது.
ஆனால், அதிபர் டிரம்ப்பின் சிறப்பான செயல்பாட்டால் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் பலரும், குடியரசு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர். அதனால், இங்கு கடந்த ஆறு முறை வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியின் கேரி கொனோலியை தோற்கடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றுள்ளார் அவர்.