தந்தை-மகன் உறவில் பிரச்சனையும்- பரிகாரமும்
பெற்றோர்கள் மற்றும் வாரிசுகள் இடையே உண்டாகும் பிரச்சினைகளுக்கு பரிகாரம்.
ஒரு மனிதன் பூமியில் பிறந்து வாழும் காலத்தில், சாதனை மனிதனாக வாழ வேண்டும். அதாவது எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் வரும்படி செய்ய வேண்டும். இல்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது. இதைத்தான் திருவள்ளுவர், “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்று எடுத்துரைக்கிறார்.
பல குடும்பங்களில் தந்தையும் மகனும் பங்காளிகளைப் போல வாழ்கிறார்கள். பல இடங்களில் இன்னும் ஒரு படி மேலே போய் தந்தையும், மகனும் பேசிக் கொள்வதே கிடையாது. அல்லது கடும் பகைவர்களாக இருக்கிறார்கள்.
தந்தை- மகன் உறவை மூன்றாக வகைப்படுத்தலாம். இதில் முதலாவது, தந்தையும் மகனும் ஒருமித்த கருத்துடன் வாழ்வது. இவர்களுடைய ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும். இல்லையெனில் 9-ம் இடத்திற்கு லக்ன சுபர் அல்லது குருவின் பார்வை இருக்கும். தா்ம கா்மாதிபதி யோகம் வரமாக செயல்படும். இவர்கள் பரம்பரை பரம்பரையாக தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்துடன் வாழ்வார்கள்.
தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது இரண்டாவது வகை. இவர்களுடைய ஜாதகத்திலும் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும். அந்த யோகமானது இவர்களுக்கு சாபமாக செயல்படும். இவா்கள் ஜாதகத்தில் குரு, சனி வக்ரமாகவோ, பலம் இழந்தோ இருக்கும். குரு அல்லது சனிக்கு, செவ்வாய் சம்பந்தம் இருக்கும்.
தந்தை மகன் கருத்துவேறுபாடு குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மன வருத்தத்தை தரும் விதத்தில் இருப்பது மூன்றாவது வகையாகும். இதனை தந்தையால் மகனுக்கு பாதிப்பு அல்லது மகனால் தந்தைக்கு மன வேததனை என்றும் வகைப்படுத்தலாம்.
பிரபஞ்ச நியதிப்படி ஒரு மனிதன் தன் விருப்பத்திற்கு ஏற்ப, வீடு, வாகனம், தொழில், நண்பர்கள் போன்றவற்றை அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம். தான் விரும்புவது போல் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் தாய்- தந்தை, முன்னோர்கள், உடன் பிறந்தவர்கள், நமக்கு பிறக்கும் பிள்ளைகள், உற்றார்- உறவினர்களை தேர்வு செய்யும் உரிமையை, இந்த பிரபஞ்சம் யாருக்கும் வழங்குவதில்லை.
எத்தனை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் இந்த பூர்வ ஜென்ம பந்த, ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது. “உறவுகளே வேண்டாம்” என்று ஒதுங்கி நின்றாலும், நம் முன்னோர்கள் மற்றும் தாய், தந்தை வழியாக நமக்குள் புகுந்த மரபணுக்களே நம்மை இயக்கும். எனவே வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது.
தந்தையால் மகனுக்கு பயனற்ற நிலை
9-ம் அதிபதி, 9-ல் நின்ற கிரகம் வக்ரம், நீச்சம், அஸ்தமனம் பெற்று இருந்தால் அல்லது 9-ல் சனி, ராகு-கேது இருந்தால் தந்தை – மகன் ஒற்றுமை இருக்காது.
9-ம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தால், அந்த நபருக்கு தந்தையால் பயன் ஒன்றும் கிடைக்காது.
9-ல் சூரியன் இருந்தாலோ, சூரியன் மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ தந்தையின் ஆதரவு கிடைக்காது.
9-ம் அதிபதி 6-ல் இருந்தால், பூர்வீகச் சொத்துக்களால் கடன், பூர்வீகச் சொத்து இழப்பு, எதிரி தொல்லை, புகழுக்கு களங்கம், முன்னேற்ற குறைவு போன்ற காரணங்களால், தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவும்.
9-ம் அதிபதியானவர் 8, 12-ல் இருந்தால், அதிர்ஷ்ட குறைவு, அதிகச் செலவு, ஏழ்மை, பூர்வீக சொத்து பறிபோதல் போன்ற காரணங்களால் தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காது.
சனி, ராகு- கேது அல்லது மாந்தியால் சூரியனுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தந்தையால் பயன் இருக்காது.
9-ம் இடத்தில் சந்திரன் – சனி சேர்க்கை அல்லது சந்திரன் சனியின் பார்வை இருந்தால், அந்த ஜாதகர் தந்தையால் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
9-ல் தனித்த சனி அல்லது சூாியன் – சனி சம்பந்தம் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு தந்தையின் பாசம் கிடைக்காது.
மகனால் தந்தைக்கு மன வருத்தம்
5-ம் இடம் அல்லது 5-ம் அதிபதிக்கு செவ்வாய், சனி பார்வை அவ்வளவு நல்லதல்ல.
5-ம் அதிபதி, 5-ல் நின்ற கிரகம் ஆகியவை நீச்சம், பகை, அஸ்தமனம், வக்ரம் அடைந்தாலும், 5-ல் ராகு ,கேது, சனி போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும், வாரிசுகளால் மனவருத்தம் உண்டாகும்.
5-ம் இடம் அல்லது 5-ம் அதிபதிக்கு 6, 8, 12 போன்ற மறைவு ஸ்தான சம்பந்தம் இருந்தால், பெற்றோர்களை பிரிந்து வாரிசுகள் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலத்தில் வாழும் நிலையை ஏற்படுத்தும்.
பரிகாரம்
வாரிசுகளால் மன உளைச்சலை சந்திப்பவர்கள், சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள், சூரிய ஓரை நேரத்தில் சிவ வழிபாடு செய்து, எள் சாதம் தானம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தந்தையால் மன விரக்தி கொண்டவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் வரும் சனி ஓரையில் சிவ வழிபாடு செய்து வர வேண்டும். அத்துடன் சிவன் கோவில் கருவறையில் எரியும் தீபத்திற்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்தால் விரைவில் மாற்றம் உண்டாகும்