சென்னை: வாக்கி டாக்கி விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவல்துறைக்கு வாக்கி டாக்கிகள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. சென்னையில் எஸ்.பி, டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸாரின் வீடுகள் உள்ளிட்ட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பாக இந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, 11 வினாக்களை எழுப்பி அப்போதைய டிஜிபிக்கு, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் புகார் தொடர்பாக, சென்னையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வாக்கி டாக்கி ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் கால கட்டத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய போலீசாருக்கு சொந்தமான இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்றது.
ரெய்டுக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தொலை தொடர்பு நிறுவனம், காவல் துறையினர் 14 பேர் மீது ஊழல் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகவும், மொத்தம் 18 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.