மதுரை:

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த ஜனவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கதிர் அறுப்பு திருவிழா மதுரை சிந்தாமணி பகுதியில் நேற்று நடைபெற்றது.  இன்று தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. .

இன்று காலை பத்து மணி அளவில்  கோயிலில் இருந்து  அம்மன்  ஞ்ச மூர்த்திகளுடன் மதுரை மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் புறப்பாடாகி, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள முத்தீஸ்வரர்  கோயிலில் எழுந்தருளினர். அங்கு தீபாரதனை  பூஜைகளுக்குப் பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.

தெப்பக்குளத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்வுக்காக,  400 ஆண்டுகள் பழமையான  பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையான நீர்வரத்து தெப்பக்குளத்துக்குக் கிடைத்தது. இதன்மூலம் நீர் நிறைந்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சாகம் சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தேவாசீர்வாதம் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், இது மட்டுமல்ல தீயணைப்பு துறையினர், மருத்துவத் துறையினர், வெடிகுண்டு நிபுணர்களும் குழுவினர் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து புறப்பட்டதால் இன்று ஒரு நாள் முழுவதும் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் மட்டுமே திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி, வீடியோ உதவி: பொதிகை குமார்