நகரி: ஆந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்களும் 6 வகையான மதிய உணவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுடன் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா அமர்ந்து உணவருந்தினார்.
ஆந்திராவில் மதிய உணவு இதுவரை பள்ளிகளில் ஒரே விதமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரான பிறகு வாரத்தின் 6 நாட்களிலும் 6 வகையான உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதற்கான உணவு பட்டியலும் தயார் செய்யப்பட்டு நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டது. திங்கட்கிழமை சாதம், பருப்புகுழம்பு, முட்டைக் கறி, வேர்க்கடலை பர்பி வழங்கப்படுகிறது.
செவ்வாய்ன்று புளியோதரை, தக்காளி பருப்பு சாதம், அவித்த முட்டை, புதன்கிழமை பிசிபேலாபாத், ஆலுகுருமா, வேகவைத்த முட்டை, வேர்க்கடலை பர்பி தரப்படுகிறது.
வியாழக்கிழமை பயித்தம் பருப்பு சாதம், தக்காளி சட்னி, முட்டை, வெள்ளிக்கிழமை சாதம், கீரை பருப்பு, முட்டை, வேர்க்கடலை பர்பி, சனிக்கிழமை சாதம் சாம்பார், சுவீட் பொங்கல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நகரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். உணவின் தரம் குறித்தும் விசாரித்து அறிந்தார்.