டெல்லி: பொய் என்று வார்த்தையை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியதால் அவை குறிப்பில் இருந்து அந்த வார்த்தை நீக்கப்பட்டது.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் ஓயவில்லை. இந் நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய உரையில் இடம்பெற்ற ஒரு வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

தேசிய மக்கள்தொகை பதிவு எனப்படும் என்பிஆர் தொடர்பாக பிரதமர்  மோடி நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, என்பிஆர் பற்றி பொய்கள் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.

பொய் என்பது நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் இதையடுத்து அவரது பேசிய அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ர

பிரதமரின் வார்த்தைகள் பாராளுமன்ற பதிவுகளிலிருந்து நீக்கப்படுவது அரிதான ஒன்றாகும். முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறிய கருத்துக்களிலிருந்தும் ஒரு வார்த்தை நீக்கப்பட்டது.

2018 ல் காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களில் இருந்து சில வார்த்தைகள் நீக்கப்பட்டன. ஹரி பிரசாத்தின் இனிஷியல் பற்றி அவர் பேசியதால் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டன.

2013 ல், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லியுடனான கடும் வாக்குவாதத்தின் போது மாநிலங்களவையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துக்களில் இருந்து சில வார்த்தைகள் நீக்கப்பட்டன. ஜெட்லியின் கருத்துக்களிலிருந்தும் சில பகுதிகள் அகற்றப்பட்டன.