டெல்லி:

ராகுல்காந்தி தொடர்பாக  மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேச்சுக்கு காங்.எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் பேச்சை திரும்ப பெறக்கோரி  வலியுறுத்தி  காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், 2 முறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் சபையில் அமளி ஏற்பட்டதால், சபை இன்று முழுவதும்ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பேசிய ராகுல் காந்தி, இந்திய இளைஞர்கள் இன்னும் ஆறு மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தடி கொண்டு அடித்து விரட்டுவார்கள் என்று கூறினார்.

இதற்கு நேற்று குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தம்முடைய முதுகை வலிமை யாக்கி கொள்ள சூரிய நமஸ்காரங்கள் செய்வேன் என, ராகுல்காந்தியின் பேச்சுக்கு மறைமுகமாக பதில் அளித்து பேசினார். மேலும், பா வைகோ உள்பட எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் இன்று மக்களவையில் ​மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பான கேள்வியை ராகுல் காந்தி கேட்டபோது, ​​அதற்கு பதில் அளிப்பதற்கு முன்பு வர்தன், பிரதமர் குறித்து காங்கிரஸ் தலைவர் சமீபத்தில் கூறிய கருத்து குறித்து ஒரு அறிக்கையை வெளியிட விரும்புகிறேன் என்றும்,, ராகுல்காந்தியின் பேச்சுக்கு கண்டனத்தை பதிவு செய்வதாக குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். பதிலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக அவையை ஒரு மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார். ஒத்தி வைக்கப்பட்ட அவை மீண்டும் கூடியதும், அமளி தொடர்ந்ததால் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.