நாசிக்
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை விலக்க மகாராஷ்டிர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக், புனே, ஜல்காவ் பகுதியில் வெங்காயம் அதிக அளவில் விளைகிறது. வெங்காய விலை மிகவும் குறைவதைத் தடுக்கவும், உற்பத்தியை முழுவதுமாக பயன்படுத்தவும் இந்தப் பகுதியில் விளையும் வெங்காயத்தில் சுமார் 20% வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
காலம் தவறிப் பெய்த கடுமையான மழையால் சென்ற வருடம் வெங்காயப் பயிர் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெங்காயத் தட்டுப்பாடு காரணமாக விலை கடுமையாக உயர்ந்தது. இதையொட்டி மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்குக் கடந்த செப்டம்பர் மாதம் தடை விதித்தது. விலை உயர்வு காரணமாகப் பல விவசாயிகள் அதிக அளவில் வெங்காயத்தைப் பயிர் செய்தனர்.
தற்போது புதிய வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காய விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மொத்த சந்தையில் வெங்காயம் ஒரு குவிண்டால் ரூ.6000 என மிக அதிகமாக விற்கப்பட்டது. வெங்காயத்தின் சராசரி விலை குவிண்டாலுக்கு ரூ.3455 ஆகும். தற்போது அதிக அளவில் வெங்காயம் கிடைப்பதால் குவிண்டால் ரூ.1600க்கு விற்பனை ஆகிறது.
இதையொட்டி வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்குமாறு மகாராஷ்டிர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் நாசிக் மாவட்டம் திந்தோரி தொகுதி பாஜக உறுப்பினர் பாரதி சவான் இந்த கோரிக்கையை மத்திய அரசுக்குத் தெரிவித்தார்.
இதே கோரிக்கையை விவசாயிகள் சங்கத் தலைவர் அனில் தன்வட் தெரிவித்துள்ளார். வெங்காய ஏற்றுமதி தடையை விலக்காவிடில் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காது எனவும் அவ்வாறு மத்திய அரசு செய்யாவிடில் விவசாயிகள் சாலைகளில் இறங்கிப் போரிட நேரிடலாம் எனவும் அவர் கூறி உள்ளார்.