சென்னை:

மிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே  32 மாவட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில்,  நிர்வாக வசதிக்காக சில மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டன. இது தொடர்பாக கடந்த ஆண்டு (2019) தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்த நிலையில்,  புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை கடந்த (2019)  ஆண்டு நவம்பர் 13ந்தேதி வெளியிட்டது.

அதன்படி, வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. மேலும் நெல்லை மாவட்டத்தை பிரித்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனிடையே புதிய மாவட்டங்களுக்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு தனி அலுவலர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர். புதியதாக உருவாகியிருக்கும் 5 மாவட்டங்களையும் சேர்த்து தற்போது தமிழகத்தில் 37 மாவட்டங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், புதியதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல் பட்டில்  5 முதன்மை கல்வி அலுவலர் உள்பட 92 புதிய பணியிடங்களை ஏற்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.