டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பேரணி நடத்தினர். ராஜ்கோட் வரை பேரணியாக சென்றனர்.
அப்போது அந்த பேரணிக்கு முன்பாக துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். பேரணிக்கு முன்பாக வேகமாக சென்று சிறிது தூரத்தில் இருந்து, துப்பாக்கியால் சுட்டார். அதில் சதாப் பரூக் என்ற மாணவர் படுகாயம் அடைந்தார்.
துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவரது வயது 17 என்பதும் பள்ளி மாணவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவர் யார்? அவருக்கு யார் பணம் கொடுத்தது? என்றார்.
முன்னதாக நேற்று அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், நான் ஒருபோதும் வன்முறையை போதிப்பதில்லை. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. உயிரே போனாலும் தலைவணங்கிச் செல்லுங்கள் என்றுதான் போதிப்பேன் என்று கூறியிருந்தார்.