டெல்லி: எமர்ஜென்சியை போல அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும் என்று மா.கம்யூ பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறார்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கான எதிர்ப்புகள் வலுப்பெற்றுக் கொண்டே வருகின்றன. கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் என பல மாநிலங்கள் கடுமையாக இதை எதிர்த்து வருகின்றன.
இந் நிலையில் இந்த சட்டத்தை எமர்ஜென்சியை போல எதிர்க்கட்சியினர் எதிர்ப்பார்கள் என்று மா.கம்யூ பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறார். தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகள் வழியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவுகளில் அவர் கூறி இருப்பதாவது: குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதால் அதை கேள்வி கேட்க முடியாது என்று வாதிட்டவர்கள், அவசரநிலையும் பாராளுமன்றத்தால் அழிக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் நாங்கள் அதை எதிர்த்து, போராடி ஜனநாயகத்தை மீட்டெடுத்தபோது, தற்போதைய ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் எங்களை போல குரல் கொடுத்தனர். ஆனால் இப்போது அவர்கள் அப்படி இல்லை.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். நாங்கள் நாடாளுமன்றத்தில் இதை எதிர்த்தோம். எல்லா அண்டை நாடுகளிலிருந்தும், எந்த மதமாக இருந்தாலும் துன்புறுத்தப்பட்ட நபர்களுக்காக ஆதரவு தெரிவித்தோம்.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்த நாங்கள், தெருக்களிலும் எதிர்ப்போம். அதுவே ஜனநாயகம் என்று கூறி இருக்கிறார்.