மும்பை: ‘ஐஎன்எஸ் கவரட்டி’ என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல், விரைவில் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அன்ட் இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம் இக்கப்பலை வடிவமைத்துள்ளது. மேலும், இந்நிறுவனம் இந்திய ராணுவத்திற்கு தேவையான போர்க்கப்பல்களை வடிவமைத்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான கமோர்த்தா, அந்நிறுவம் சார்பில் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், 2015ம் ஆண்டு இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான கட்மட்டும், 2017ம் ஆண்டு மூன்றாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான கில்டானும் ஒப்படைக்கப்பட்டன.
தற்போது, அதேவகையிலான நான்காவது கப்பலான ஐஎன்எஸ் கவரட்டி, இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அனைத்துகட்ட சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதியில், அக்கப்பல் ஒப்படைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
சுமார் 3300 டன் எடைகொண்ட போர்க் கப்பலான ‘கவரட்டி’, நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் 90% உள்நாட்டு தொழில்நுட்பத்தால் ஆனது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.